போலீஸ் அறிக்கை முன்னுக்கு பின் முரண் - மதுரை ஆதீனம் பரபர குற்றச்சாட்டு
காவல் துறையின் அறிக்கை முரணாக உள்ளது என மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறை விளக்கம்
செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு 3ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம், மதுரையிலிருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இதையடுத்து விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதீனம் சென்னை புறப்பட்டார். தொடர்ந்து இந்த விபத்து திட்டமிட்ட சதி என்றும், தன்னை கொலை செய்யவே இது போன்ற விபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். பின் இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மதுரை ஆதீனம் சென்ற கார், அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்லவில்லை.
மதுரை ஆதீனம் மறுப்பு
அதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக சென்றது. அப்போது காலை 9.45 மணிக்கு சேலம்- சென்னை நோக்கி சென்ற மாருதி கார் ரவுன்டானா அருகே மெதுவாக கடந்தது. அப்போது மதுரை ஆதீனம் காரின் பக்கவாட்டில் அந்த கார் உரசியது. இதனால் இரு கார்களும் லேசான சேதமடைந்தன.
முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் இல்லை. ஆதீனம் பயணம் செய்த கார் டிரைவரின் கவனக்குறைவாலேயே விபத்து நடந்துள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், ஆதீனத்தின் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை ஆதீனம் இன்று போலீசாரின் விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”எங்களை பற்றியும் எங்கள் தரப்பு வாகனத்தைப் பற்றியும் முழு விவரங்களை தெளிவாக காவல்துறை அறிவித்தது. எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும், அவருடைய விவரங்கள் பற்றியும், தடுப்புகளைத் தாண்டி அவர்கள் மோதியதை பற்றியும், பதிவு எண் பொருத்தப்படாத வாகனமாக நாங்கள் குற்றம் சாட்டியதை பற்றியும் ஒரு இடத்தில் கூட காவல் துறை பதிவு செய்யப்படாது வருத்தம் அளிக்கிறது.
காவல்துறை எதிர் தரப்பினர் பற்றி விவரத்தை தொடர்ந்து எங்களுக்கு அளிப்பதை மறுத்து வந்தது சந்தேகத்துக்கிடமானது. மீண்டும் எதிர் தரப்பில் இருவர் மட்டும் பயணித்து வந்த வாகனத்தில் குடும்பத்தோடு பயணம் செய்து வந்த வாகனம் என்று சொல்லி இருப்பது மேலும் வேதனை அளிக்கிறது. முன்னுக்கு பின் முரணாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.