மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பா? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதரஸா கல்வி வாரியம்
உத்திரபிரதேச மாநிலத்தில் 16,000 மதரஸாக்கள் உள்ளன. இதில் 17 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதற்காக கடந்த 2004-ம் ஆண்டு 'மதரஸா கல்வி வாரிய சட்டம்' கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில், மதராஸா கல்வி வாரிய சட்டம், மதச்சார்பின்மை விதிமுறைகளை மீறுவதாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்து அந்த சட்டத்தை ரத்து செய்தது. மேலும், மதரஸா மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் மாநில அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது மதரஸா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "மதக் கல்வியை, மத போதனையாக எப்படிக் கருத முடியும்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மதரஸா கல்வி பொதுவான கல்வியல்ல என்பதும், தரமற்றது எனக் கூறுவதும் அடிப்படையிலேயே தவறான வாதம். அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவால், 17 லட்சம் மதரஸா மாணவர்களும், 10,000 ஆசிரியர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது சரியல்ல. மதரஸா வாரியத்தின் நோக்கங்கள் ஒழுங்குமுறையுடன் கூடியது. மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்குப் பாதிப்பு ஏற்படாது. மதரஸாக்களில் பயின்ற 17 லட்சம் பேரை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.
அவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த உத்தரவாதமும் இல்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.