குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த முடியாது - நீதிமன்றம் கடும் கண்டனம்!
குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குண்டர் சட்டம்
நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, செல்வராஜ் என்ற நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம்,
வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் உதவியுடன் போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டதோடு, போலி ஊதியச் சான்று தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் வங்கியில் கடன் பெற்று ரூ.3.30 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்றம்
இதையடுத்து, மனுதாரர் உதவியுடன் மோசடி நடைபெற்றதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் போடப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் இதுபோன்ற தனி நபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், யார் குண்டர்கள் என்பதை தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும், யார் மீது குண்டர் சட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும், குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அறிவுறுத்தி உள்ளது.