புகையிலை, குட்கா பொருட்கள் மீதான தடை ரத்து - உயர்நீதிமன்றம்!

Tamil nadu Madras High Court
By Sumathi Jan 25, 2023 10:07 AM GMT
Report

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள்

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பாக அறிவிப்பு ஆணைகளும் பிறப்பிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

புகையிலை, குட்கா பொருட்கள் மீதான தடை ரத்து - உயர்நீதிமன்றம்! | Madras High Court Cancelled Ban Gutka Pan Masala

இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் மேல் முறையீடும் தாக்கல் செய்யப்பட்டது.

 தடை ரத்து

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு விசாரித்து வந்தது. உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலையை உணவு பொருளாக சுட்டிக்காட்டவில்லை என தெரிவித்தனர்.

இருப்பினும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதை, முறைப்படுத்துவது பற்றி மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.