‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு அதிகரிப்பு; அறிகுறிகள் இதுதான் - மக்களே உஷார்
மெட்ராஸ் ஐ பாதிப்பு வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
மெட்ராஸ் ஐ
காலநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இதன் பாதிப்பு. பெரும்பாலும் இந்த பாதிப்பு காற்று மூலமாக பரவக்கூடியது.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகித்தால் மற்றவர்களுக்கும் இந்த நோய் தொற்று ஏற்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
என்ன அறிகுறிகள்?
குறிப்பாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த் தொற்றுதான். ஆனால் அதை ஆரம்பகட்ட நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அலட்சியம் செய்தால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை இதன் முக்கிய அறிகுறிகள்.
ஒரு கண்ணில் ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. தாங்கள் பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.