இனி அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை - அமைச்சர் அறிவிப்பு
இனி அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவருக்கு கத்திக்குத்து
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மா.சுப்பிரமணியன்
இதனையடுத்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை நன்றாக உள்ளது. இன்று மதியத்திற்குப் பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, தனியறைக்கு மாற்றப்பட உள்ளார். அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர், ‘காவல் உதவி’ செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
டேக் கட்டும் முறை
பொது மருத்துவப்பிரிவுக்கு வருவோருக்கு நீலநிற டேக், தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருவோருக்கு சிவப்பு நிற டேக், சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு வருவோருக்கு மஞ்சள் நிற டேக், சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு வருவோருக்கு பச்சை நிற டேக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நோயாளியுடன் வருவோருக்கு டேக் கட்டும் நடைமுறை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் உள்ளது. இனி 36 மருத்துவகல்லூரி, 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படிப்படியாக டேக் அறிமுகம் செய்யப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமரா செயல்படுவதை உறுதி செய்யவும், மருத்துமனை ஒப்பந்த பணியாளர் வருகை பதிவேட்டை பயோமெட்ரிக்கில் பதிவு செய்யவும் அறிவுரை வழங்கியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.