18 மணி நேரம் கூட ஓவர் டைம் பார்ப்பார்; அப்படித்தான் பேசுவார் - தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜி பின்னணி!
தாக்கப்பட்ட மருத்துவர் தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவர் மீது தாக்குதல்
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயதுடைய விக்னேஷ் என்ற இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நலமுடன் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு காரணமாக கைதான விக்னேஷ், மருத்துவர் தனது தாய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்பதாக கூறி இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
இந்நிலையில், மருத்துவர் பாலாஜி ஜெகநாதன், பேராசிரியர் & HOD, மருத்துவ புற்றுநோயியல் துறையில் பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் ஒரு மருத்துவர் ஒரு நாளுக்கு 3 நோயாளிகளை குறைந்தபட்சம் பார்க்க வேண்டும். அதற்கு மேல் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் பாலாஜி 120க்கும் அதிகமான நோயாளிகளை பார்க்க கூடியவர்.
சில நாள் ஓவர் டைம் பார்த்து 200 நோயாளிகளை கூட பார்க்க கூடியவர். அவர் மிக மிக சாந்தமாக, கண்ணியமாக பேச கூடியவர். யாரிடமும் அவ்வளவு எளிதாக கோபம் அடைய கூடியவர் இல்லை. அந்த மருத்துவரை தாக்கிய விக்னேஷ் குடும்பத்திற்கு நோயை பற்றி எந்த தெளிவும் இல்லை.
முக்கியமாக புற்று நோய் சிகிச்சைக்கு கீமோதெரபி கொடுத்தால் உறுப்புகள் பாதிக்கப்படும் என்பது தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.