‘அப்பாவாக இருந்து சொல்கிறேன்...’ - மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மாணவர்கள் தற்கொலை
கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர்ச்சியில் உலுக்கியது.
இதைத் தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்களும், சில இடங்களில் அதற்கான முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால்போதும். படிப்பு தானாக வரும். உடல்நலனை மாணவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து நான் இதை சொல்கிறேன் என்று பேசினார்.