இனி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி : அரசாணையில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொண்டுபாதிக்காது
805 வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட இருக்கிறது. திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மாணவிகளிடத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்
கொரோனாவால் என் தொண்டை பாதிக்கப்பட்டாலும், தொண்டு பாதிக்காது. மருந்துகளை விட, மாணவர்களின் முகம் காண்பது சிறந்தது. மாணவர்களின் முகம் காணும்போது நலம் பெறுகிறேன். பள்ளி மாணவர்கள் காலை உணவை எப்போதும் தவற விடாதீர்கள்.
மாணவர்களிடம் நலன் பற்றி நான் தனியாக உரையாடியபோது ஐந்தில் 3 மாணவர்கள் காலை உணவை சாப்பிடவில்லை என கூறினார்கள். இதையடுத்து பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையில் நேற்றுதான் கையெழுத்திட்டேன்.
காலை சிற்றுண்டி திட்டம்
அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தன்னம்பிக்கை தானாக வந்துவிடும்.
பள்ளிகள் வெறும் மதிப்பெண் பெறும் கூடங்களாக மட்டும் இருக்கக்கூடாது. பாடங்கள் நடத்தும் கூடங்களாக மட்டும் இருந்துவிடக் கூடாது.
மாணவர்களின் அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகிய அனைத்தும் பலப்படுத்தும் இடமாக பள்ளிக்கூடங்கள் அமைய வேண்டும் எப்போதும் சுறுசுறுப்புடன் இருங்கள், சோம்பேறித்தனம் நம் வளர்ச்சிக்கு தடை என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.