தூங்குனது போதும்பா எந்திரி - திருட போன வீட்டில் ஏசி போட்டு தூங்கிய திருடன்
திருட சென்ற இடத்தில் ஏசியை ஆன் செய்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் பாண்டே. இவர் வாரணாசியில் பணிபுரிவதால் வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று (2 ஜூன் 2024) சுனில் பாண்டே வீட்டின் முன் கேட் உடைந்திருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் சுனில் பாண்டேவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வாரணாசியில் இருந்து உடனடியாக லக்னோவுக்கு வரமுடியாத காரணத்தால், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், சுனில் பாண்டேவின் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு திருடன் ஒருவன் தலையணையை வைத்து அசந்து தூங்கியிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவரை கஷ்டப்பட்டு எழுப்பிய போலீசார், கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுனில் பாண்டேவின் வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட திருடன் வீட்டின் முன் கேட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதிகமாக மது அருந்தியதால் போதையில் அங்கு ஒரு அறைக்கு சென்று ஏ.சியை போட்டு அசந்து தூங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.