வடிவேலு பாணியில் திருடிய பொருட்களுடன் குறட்டை விட்டு தூக்கம் - விடிந்ததும் போலீசில் சிக்கிய கதை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் மற்றும் வீடுகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்ட பிளம்பர் ஒருவர், வடிவேலு பாணியில் திருடிய பொருட்களோடு குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த போது போலீசில் சிக்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கோயில் மற்றும் வீடுகளில் தங்க நகைகள், குத்து விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போவது வாடிக்கையாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், 4 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் தெருக்களில் சுற்றி வருவதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலமாகவே அவர்களை பின் தொடர்ந்த போலீசார், மர்ம கும்பல் சென்ற வீட்டை அடையாளம் கண்டு கொண்டனர். இதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சத்தமில்லாமல் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர்.
அப்போது அந்த திருடன் திருடிய பொருட்களுக்கு மத்தியில் குறட்டை விட்டு தூங்கியுள்ளான்.
இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 600 கிலோ மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.