Israel-Hamas War: காசாவில் சுகாதார பணியாளர்களுடனான தொடர்பை இழந்து விட்டோம் - WHO தலைவர்!
காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம் என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல்-ஹாமாஸ் போர் உச்சமடைந்துள்ளது.
தொடர்பை இழந்து விட்டோம்
இதில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 7000த்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இத்தனை உயிர்களை பலிகொண்ட போரானது இன்னும் முடிவடையாமல் 3வது வாரமாக தொடர்கிறது.
இந்நிலையில் காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம் என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "காசாவில் பணியாற்றி வந்த உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் (Staff), சுகாதார பணியாளர்கள், மனிதாபிமான உதவிகள் செய்யும் பார்ட்னர்கள் ஆகியோர் உடனான தொடர்பை இழந்துவிட்டோம்.
காசாவில் உள்ள அனைத்து மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும். முழு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற செய்ய வேண்டும்" என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.