தனி வாக்குச்சாவடி.. ஒரே ஒரு ஓட்டு - 100% வாக்குப்பதிவை உறுதி செய்த பூசாரி!
ஒரே ஒரு ஓட்டு போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
வாக்குப்பதிவு
மக்களவை தேர்தலில் நேற்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உத்திர பிரதேசம், குஜராத், கோவா கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தின் பனேஜ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரே ஒரு ஓட்டு போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
ஒரே வாக்காளர்
கிர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பனேஜின் கோவில் பூசாரியாக மஹந்த் ஹரிதாஸ் என்பவர் உள்ளார். இவர் ஜூனாகத் மக்களவை தொகுதியின் கீழ் வரும் வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட ஒரே வாக்காளர் ஆவார்.
இவருக்காக தேர்தல் ஆணையம் அமைத்த தனி வாக்குச்சாவடியில், நேற்று காலை 11 மணியளவில் மஹந்த் ஹரிதாஸ் வாக்களித்தார். இதன் மூலம் அந்த வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.