கிறிஸ்துமஸ் கொண்டாடினால் சிறை - எந்த நாடுகளில் தெரியுமா?
உலகின் சில நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ்
உலகளவில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்துவ மதம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 30% பேர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வருகின்றனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸை உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது முக்கிய பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் உலகின் சில நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகள் குறித்து பார்க்கலாம்.
தஜிகிஸ்தான்
தஜிகிஸ்தான் முஸ்லீம் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாகும். இந்த நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2015 ஆம் ஆண்டு தஜிகிஸ்தானின் கல்வி அமைச்சகம், பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் அல்லது பிற கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.
தற்போது அங்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று பட்டாசு வெடித்தல், சிறப்பு உணவுகள் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புருனே
தென்கிழக்கு ஆசிய நாடான புருனேவில் 2014 ஆம்ஆண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தடை செய்தார் சுல்தான் ஹசனல் போல்கியா. இது நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நம்பிக்கைகளை பாதிக்கலாம் என கருதினார். மீறி கொண்டாடுபவர்களுக்கு 5 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
முஸ்லீம் அல்லாதவர்கள் கொண்டாடி கொள்ளலாம் ஆனால் பொது இடத்தில் கொண்டாட அனுமதி இல்லை. தங்களது வீடுகளில் கொண்டாடிக்கொள்ளலாம். அதற்கு முன்னதாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
சோமாலியா
சோமாலியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள நாடு ஆகும். சோமாலியாவின் மத விவகார அமைச்சக இயக்குநர் ஜெனரல் ஷேக் முகமது கைரோ 2015 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டின் இஸ்லாமிய நம்பிக்கையை அச்சுறுத்துவதாக உள்ளதாக கூறி தடை விதித்தது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்குமாறு அந்நாட்டு காவல்துறை, தேசிய பாதுகாப்பு உளவுத்துறை மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வட கொரியா
வட கொரியா பொதுவாக கடுமையான கட்டுப்பாடுகளை உடைய நாடு. மதங்களை பொறுத்தவரை வடகொரியா கம்யூனிச நாடாகவும், நாத்திக அரசாகவும் அறியப்படுகிறது. அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைகளை தடை செய்வதாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
மேலும், 1919 ஆம் ஆண்டு அன்றைய தினம் கிம் ஜாங் உன்னின் பாட்டி பிறந்ததால் அவருடைய பிறந்தநாளை கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா இஸ்லாமிய நாடாகும். இங்கு பிற மத பண்டிகைகளை ஊக்குவிப்பதில்லை. அதே நேரம், வெளிநாட்டவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை ரகசியமாக கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பொதுவெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சவுதி அரேபியாவில் அனுமதிக்கப்படுவதில்லை.