ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே மது டெலிவரி..? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்!
ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் மது விற்கும் திட்டம் இல்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆன்லைன் டெலிவரி
தமிழகத்தில் பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைந்த மதுபான வகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
மேலும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
டாஸ்மாக் விளக்கம்
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாவது, "ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மது விற்கும் திட்டம் இல்லை.
இது போன்ற எந்த புது முயற்சியிலும் டாஸ்மாக் நிறுவனம் இறங்கும் திட்டம் இல்லை. டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்படவில்லை" என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.