காணாமல் போன சாவியை முடிந்தால் பிரதமர் மோடியே கண்டு பிடித்து தரட்டும் - வி.கே.பாண்டியன்!
முடிந்தால் பிரதமர் மோடி காணாமல் போன சாவியை கண்டு பிடித்து தரட்டும் என வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அதில் முதல் 4 கட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், தற்போது 5ம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்தது.
எஞ்சிய 2 கட்ட வாக்குப்பதிவுகளுக்கான பிரச்சாரத்தில் முக்கிய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தீவிரமக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், ஒடிசாவில் நடந்த பரப்புரையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்.
அதிகாரியான வி.கே.பாண்டியனை மறைமுகமாக தாக்கி பேசினார். அதாவது , காணாமல் போன புரி ஜெகநாதர் கோவில் சாவிகள் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் பேசுபொருளாக மாறியது. இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு வி.கே.பாண்டியன் பதில் அளித்து உள்ளார்.
வி.கே.பாண்டியன்
அவர் அளித்த பேட்டி ஒன்றில், "கோவிலின் பொக்கிஷ அறை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. பொக்கிஷ அறையை ஆய்வு செய்ய ஒடிசா ஐகோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி ஆய்வு செய்தபோதுதான் அறையின் சாவிகள் காணாமல் போனது தெரியவந்தது.
கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து, ஒடிசா அரசு கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அசல் சாவிகள் தொகுப்பு இல்லை என்றாலும், நகல் சாவிகள் உள்ளன.
காணாமல் போன சாவிகள் குறித்து இப்போது பேசும் பிரதமர் மோடி, முடிந்தால் அவரே அந்த சாவியை கண்டுபிடித்து தரட்டும். கோவில் விழாவையொட்டி பொக்கிஷ அறை திறக்கப்படும். அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.