பொதுமக்களுக்கு எச்சரிக்கை; சிறுத்தை நடமாட்டம் - வீட்டை விட்டு வெளியேற தடை!
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சிறுத்தை நடமாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் பகுதியில் மக்கள் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்ததாக சிலர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த செய்திஅப்பகுதியில் ஏராளமானோருக்கு பரவியது.
இந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்தப் பகுதியில் சோதனை செய்தபோது சிறுத்தையின் கால் தடத்தை கண்டறிந்தனர். இதன் பிறகு, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியில் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மக்களுக்கு எச்சரிக்கை
இதை தொடர்ந்து, வனத்துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்து ஆராய்ந்து பார்த்தத்தில் அது சிறுத்தையின் கால் தடம் என்று உறுதி செய்தனர் வனத்துறையினர்.
மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. மக்கள் அதிகம் வசிக்கும் மையப்பகுதியில் சிறுத்தை வளம் வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.எனினும், சிறுத்தையால் விபரீதம் ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கேட்டு கொண்டனர்.
இந்நிலையில், காலை சிறுத்தை பன்றியை கடித்துள்ளதால் மீண்டும் மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
அதிகாரிகள் தேடுதல் வேட்டையை துவங்கி உள்ளனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்கரை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.