நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்பட 7 மணி காட்சிக்கு அனுமதி? தமிழக அரசு புதிய அறிவிப்பு!
லியோ திரைப்படத்தின் 7 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என்று தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
லியோ திரைப்படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சி வெளியிடுவது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது.
இதனையடுத்து அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரி செவன் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும், 7 மணி காட்சி தொடர்பாக உரிய முடிவு எடுத்து அதனை தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அனுமதியில்லை
இந்நிலையில் 'லியோ' படத்தின் 7 மணி காட்சியை அனுமதிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த தமிழக அரசு, முதல் காட்சி 9 மணிக்கே தொடங்கும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், 9 மணிக்கு முன் படத்தை திரையிட அனுமதித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் டிஜிபி ஷங்கர் ஜிவால் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துக்கு, உள்துறை செயலாளர் பி.அமுதா எழுதியுள்ள கடிதத்தில் "தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.