நடிகர் விஜய்யின் 'லியோ' அதிகாலை 4 மணி காட்சி - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
லியோ சிறப்பு காட்சி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் 'படத்தின் முதல் காட்சியை, அக்.19ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது.
இதனையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் "நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிடலாம். காலை 9 மணிமுதல் தான் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், இறுதி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம், அதிகாலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதியளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தது.
மேலும், 9 மணி காட்சிக்கு பதில் 7 மணிக்கே திரையிடவும் அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 9 மணிக்கு பதில் 7 மணிக்கு வெளியிடுவது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.