நான் இறந்து விட்டேன் - அமைச்சர் நேரு பதிவில் கமெண்ட் செய்த லால்குடி திமுக எம்.எல்.ஏ
லால்குடி எம்.எல்.ஏ மரண அறிவிப்பு - அமைச்சர் நேரு பேஸ்புக் பதிவில் சர்ச்சை
தமிழக அமைச்சர் கே.என் நேருவின் பேஸ்புக் பதிவில் லால்குடி எம்.எல்.ஏ சௌந்தர பாண்டியன் செய்த கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே.என்.நேரு
திருச்சி மாவட்டம் லால்குடியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப்குமார் இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். இதில் அரசு அலுவலர்கள், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.என பதிவிட்டிருந்தார்.
சௌந்தரபாண்டியன்
அமைச்சரின் இந்த பதிவில் கமெண்ட் செய்த லால்குடி திமுக எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன், "லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது" என பதிவிட்டார்.
இந்த விஷயம் வைரலானதை தொடர்ந்து எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் அந்த கமெண்டை நீக்கி விட்டார். ஆனாலும் அந்த கமென்டை ஸ்கீரின் ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து திமுகவில் உட்கட்சி பூசலா, எம்.எல்.ஏ ஆர். சௌந்தரபாண்டியன் அமைச்சர் நேருவால் புறக்கணிக்கப்படுகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சௌந்தரபாண்டியன் 2006, 2011, 2016, 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் லால்குடி தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ந்து 18 ஆண்டுகளாக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருந்து வருகிறார்.