குடிசை வீட்டிலிருந்து நீதிபதியான கூலித்தொழிலாளி மகள் - சாதித்த அரசுப் பள்ளி மாணவி!
நீதிபதியாக தேர்வாகியுள்ள கூலித்தொழிலாளி ஒருவரின் மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தேர்வில் வெற்றி
திருவாரூர் மாவட்டம் நாலாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளி கணேசன் மற்றும் அவரின் மனைவி சந்திரா. இவர்களின் மகள் சுதா ஒன்றாம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ளார்.
மேலும், திருநெல்வேலியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துள்ளார். பின்னர் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையில் தமிழக அரசு நடத்திய நீதிபதி தேர்வுக்கான முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்வுகளிலும் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்டத்திலேயே சுதா மட்டும் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
குவியும் பாராட்டு
இந்நிலையில் குடிசை வீட்டில் வாழ்ந்து, தனது கடின உழைப்பால் நீதிபதி பதிவுக்கு சென்றுள்ள சுதாவுக்கு அவரது கிராம மக்கள் ப்ளக்ஸ், பேனர் வைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய சுதா, "நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஏழை மாணவியான நான், முதல்நிலை தேர்வெழுதி வெற்றி பெற்ற பிறகு அடுத்த நான்கு மாதங்களிலேயே இரண்டாம் நிலை தேர்வெழுதி அதன் பிறகு நேர்முகத் தேர்வு சென்று நீதிபதியாகியுள்ளேன்.
இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. எனக்கு பயிற்சி கொடுத்த நீதிபதிகள் மற்றும் தொடர்ந்து படிக்க உதவிகள் செய்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்தான் எனது வெற்றிக்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.