சொத்து குவிப்பு வழக்கு: 6 பெட்டிகளில் தமிழகம் வரும் ஜெயலலிதா நகைகள் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மீண்டும் தமிழகத்திற்கு வரவுள்ளது.
ஜெயலலிதா நகைகள்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் வரும் மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் ஆஜராகி ஜெயலலிதாவின் தங்க நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கு செலவு கட்டணமாக 5 கோடி ரூபாய் கர்நாடக அரசுக்கு தமிழக அரசு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெங்களூரில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கலாம் எனத் தெரிகிறது.