அனைத்து டாஸ்மாக் கடைகள் நாளை மூடல் - தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
அனைத்து மதுபானக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை
தமிழ்நாட்டில் மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தின்கீழ் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தது. இதன் மூலம் 2022-2023-ம் ஆண்டில் 44,098.56 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு சுமார் 500 டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டது.
இந்த மதுபான கடைகள் அனைத்தும் வருடத்தில் ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர 2 ஆகிய முக்கியமான நாட்களில் மூடப்படுவது வழக்கம். இது தவிர டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கடைகள் தேர்தல் சமயங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாடுகளிலும் விடுமுறை அளிக்கப்படும்.
அந்த வகையில், மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அதற்காக ப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டன. அடுத்ததாக வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழக அரசு
இந்த நிலையில், நாளை மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி மதுபான கடைகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக தொழிலாளர் தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.
அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு தமிழக அரசு எச்சரித்துள்ளது.