உதயநிதி தீபாவளி வாழ்த்து சொல்ல காரணம் இதுதான் - எல்.முருகன்
2026 ல் திமுக என்னும் நரகாசுரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என எல்.முருகன் பேசியுள்ளார்.
எல்.முருகன்
மத்தியமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த தீபாவளி நமக்கு இரட்டிப்பு சந்தோசத்தை தரும் தீபாவளி. இந்த தீபாவளியின் சிறப்பு பல மக்களின் பிரார்த்தனை 500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கொண்டாடப்படும் முதல் தீபாவளியாகும்.
திமுக என்னும் நரகாசுரன்
இந்த தீபாவளியில் தீய சக்திகளை ஒழித்து விட்டு, நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் பிரதமரின் 2047 ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்.
புத்தாடை அணிந்து நரகாசுரனை அழித்த கொண்டாட்டத்தில் இருக்கிறோம். இதே போல் திமுக என்னும் நரகாசுரனை 2026 ல் வீட்டிற்கு அனுப்பி விட்டு ஒரு சிறந்த தீபாவளியை கொண்டாடுவோம்.
தீபாவளி வாழ்த்து
நாம் வெற்றி வேல் யாத்திரை நடத்திய அதே திருத்தணியில் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வேலை கையில் எடுத்தார்கள். நான், அண்ணாமலை, வானதி சீனிவாசன், போன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தியதால் உதயநிதி ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீங்கள் முதலமைச்சராக, நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக உள்ளீர்கள். பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம்? வாழ்த்து சொல்வதற்கு உங்களை யார் தடுத்தது?
நீங்கள் அனைத்து மக்களாலும் மதிக்கப்படுகிற மனிதர்களாக இருக்க வேண்டும். எனவே அனைத்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்" என பேசினார்.