மோடியே திராவிடர்தான்; உதயநிதி ஸ்டாலின் கிறித்துவர் - எச்.ராஜா பேச்சு
முதல்வரும், துணை முதல்வரும் மன நோயாளிகள் போல் பேசுகின்றனர் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
எச்.ராஜா
தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ் தாய் வாழ்த்து பாடியவர் திராவிடம் என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடி விட்டார். இதற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநரை எப்படி குற்றஞ்சாட்ட முடியும்" என கேள்வி எழுப்பினார்.
உதயநிதி கிறித்துவர்
மேலும், "தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மன நோயாளிகள் போல் பேசி உள்ளனர். உங்களின் மலிவான அரசியலுக்காக தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநரை அசிங்கப்படுத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.
உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு அரசியல் நடத்துகிற பேர்வழி. அன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் பேசியது வரி விடாமல் எனக்கு நினைவில் உள்ளது. நான் கிறித்துவர், நான் காதலித்து மணந்த எனது மனைவி கிருத்துவர். இதை சொன்னதும் சேகர் பாபு அல்லோலயா அல்லோலயா என கூறினார். நீங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரான தீய சக்திகள் என நான் குற்றஞ்சாட்டுகிறேன்.
ஹிந்து மதம் டெங்கு கொசு மாதிரி என நீங்கள் பேசும் முன் நானும் எனது மனைவியும் கிருத்துவர் என கூறி உள்ளீர்கள். அப்போ கிருத்துவ மத வெறியர்கள் தூண்டி விட்டு தான் உங்களை இப்படி பேச சொல்கிறார்களா என கேட்க முடியும்.
மோடியே திராவிடர்
திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல. தக்காணம் பகுதிக்கு தெற்கே உள்ள காடுகள் நிறைந்த பகுதி, இது 56 தேசங்களாக இருந்த நிலையில் அதில் இரு பெரு நிலப்பரப்புகளாக இருந்த நிலையில் ஒரு பகுதி பஞ்ச திராவிடம் எனப்படுகிறது. இதில் முதல் மாநிலமே குஜராத்தான். எனவே பிரதமர் மோடியும் ஒரு திராவிடர்தான். என்சைக்ளோபீடியாவில் திராவிடர்கள் என்றால் தென்னிந்திய பிராமணர்கள் என உள்ளது.
ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில், அனைத்து துறைகளும் சீரழிந்து விட்டது. மின்சார துறையில் ஊழியர்கள் பலர் விபத்தில் உயிர் இழந்துள்ளனர். போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்கு முன்னாள் சென்னையில் மட்டும் தான் வெள்ளம் வந்தது. இப்போது கோயம்புத்தூர், காரைக்குடியில் கூட வெள்ளம் வருகிறது". சென்னை வெள்ளத்திற்கு திமுகவே காரணம்" என பேசியுள்ளார்.