கூத்தாண்டவர் கோவில் அரவான் களப்பலி - தாலிக்கட்டி கதறிய திருநங்கைகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவான் களப்பலி நடைப்பெற்றது.
கோவில் திருவிழா
திருநங்கைகள், திரளாக கூடி கொண்டாடும் விழாவாக கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது. அவர்களின் குல தெய்வமாக கருதுகின்றனர். ஆண்டுதோறும் அரவானை வழிபட டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் இங்கு வருகை தருவார்கள்.
இதனைத் தொடர்ந்து, அரவான் களப்பலியை நினைவு படுத்தும் விதமாக இரவு சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு, கோவில் வாசலில் அனைத்து திருநங்கைகளும் தங்களை புதுமணப் பெண்கள்போல் ஆடை அணிகலன்களால் அலங்கரித்துக் கொண்டனர்.
கோலாகல கொண்டாட்டம்
அதன்பின், கோவிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட பிறகு தங்கள் கணவனான அரவானை நினைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர். விடிய விடிய கும்மியடித்து ஆட்டமும், பாட்டமுமாக இருந்தனர். இதனையடுத்து அரவான் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, தேர் அழிகளம் நோக்கி சென்றது.
அப்போது, திருநங்கைகள் சோகமாக கண்ணீர் விட்டு உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும், வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டபடி தேரை பின் தொடர்ந்தனர்.
அரவான் களப்பலி கொடுக்கப்பட்டவுடன், திருநங்கைகளின் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து நொறுக்கி கழுத்தில் அணிந்திருக்கும் தாலிகளை கழற்றினர். தலை குளித்து வெள்ளாடை அணிந்து விதவைக்கோலம் பூண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.