ஆடை சுதந்திரம் இருக்கலாம், ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு - குஷ்பூ பேட்டி!
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை குஷ்பூ பெண்கள் ஆடை அணிவது குறித்து பேசியுள்ளார்.
ஆடை அலங்கார நிகழ்ச்சி
கோவையில் பீளமேடு பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசிய மகளிர் ஆணைய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். அப்போது மாணவிகளை மகிழ்விப்பதற்கு இருவரும் கேட் வாக் செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, "கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். இன்று அவரது நினைவுநாள், காலையிலேயே அவருக்கு வணக்கம் சொல்லி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்துள்ளேன்.
அவரைப் பற்றி பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம், நான் அங்கிருந்து வந்தவள் , அவரைப் பற்றி நன்றாக தெரியும்” என்று கூறினார்.
ஆடை சுதந்திரம்
இந்நிலையில், அவர் கைத்தறி ஆடைகள் குறித்து பேசியுள்ளார், அதில் அவர், "கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும். கல்லூரி மாணவர்கள் மேற்கத்திய உடைகள் அணிய வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே வேளையில் நமது கலாச்சாரங்களை மறந்துவிட வேண்டாம் என சொல்கின்றேன்.
ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை. ஆனால் மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது, நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை அணிய வேண்டும். எனக்கு புடவை தான் எல்லை" என்று கூறியுள்ளார்.