மகளிர் உரிமை தொகை ரூ.1000.. இனி பாதி பேருக்கு கிடைக்காது - குஷ்பூ பகீர் பேட்டி!
உரிமை தொகை இனி பாதி பேருக்கு கிடைக்காது என்று குஷ்பூ கூறியுள்ளார்.
மகளிர் தொகை
தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பேசியுள்ளார். அதில் அவர், "மகளிர் உரிமை தொகை கிடைக்கும் பாதிப் பேருக்கு வரும் காலங்களில் மாதம் ரூ. 1000 கிடைக்காது. திமுகவும் காங்கிரஸும் விதவிதமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்த கட்சிகள்.
இது எல்லாருக்கும் தெரியும். பிரசாரத்தின் சமயத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனச் சொன்னார்கள். தேர்தலில் வென்றதும் அது குறித்து பேச்சே இல்லை. எதிர்க்கட்சிகள் இதைத் தொடர்ந்து கேள்வியாக எழுப்பினோம்.
அதன் பிறகே 2 ஆண்டுகள் கழித்து உரிமை தொகை வழங்குவதாக அறிவித்தார்கள். அதுவும் அனைவருக்கும் இல்லை.. தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்தார்கள்".
பேட்டி
இதனை தொடர்ந்து, "ஆனால் இப்போது என்ன சொல்லி இருக்கிறார்கள் எனப் பாருங்கள். கையில் ஸ்கேல் உடன் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த போகிறார்களாம். அரசு சொன்ன தகுதி இருந்தால் மட்டுமே ரூ.1000 தருவார்களாம். இல்லையென்றால் கொடுக்கும் உரிமை தொகையையும் கூட நிறுத்திவிடுவார்களாம். அதாவது வரும் காலத்தில் பாதிப் பேருக்கு இந்த உரிமை தொகை கிடைக்காது.
பெண்களை ஏமாற்றி வாக்கு வாக்க வேண்டும் என்பதற்காக இந்த பொய்யைச் சொன்னார்கள். பெண்களும் ஏமாந்து வாக்களித்துவிட்டனர். கர்நாடகாவிலும் இதையேதான் காங்கிரஸ் செய்தது. அனைத்து பெண்களுக்கும் என முதலில் அறிவித்தவர்கள்..
இப்போது வீட்டிற்கு ஒருவருக்கு மட்டும் என்கிறார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி என்றாலே அது மக்களை ஏமாற்றும் கூட்டணி என்பதை மக்கள் இப்போது புரிந்திருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.