நவக்கிரக சுற்றுலா: ஒரே நாளில் 9 தலங்களுக்கு செல்லலாம் - அமைச்சர் அசத்தல் அறிவிப்பு!
நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு சுற்றுலா
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கும்பகோணம் மற்றும் அதைசுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் ஒரே பேருந்தில் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்பது பயணிகள்,
பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதை ஏற்று, நவக்கிரக சுற்றுலா சிறப்பு பேருந்துஇயக்கம் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் கும்பகோணம் போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகள் இயக்கப்படும்.
முன்பதிவு செய்த பயணிகளுடன் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்து, திங்களூர் சந்திரன்கோயில், ஆலங்குடி குரு பகவான்தரிசனத்துக்கு பயணிகளை இறக்கிவிடும். அடுத்து, காலை உணவு இடைவேளை.
அரசு ஏற்பாடு
பிறகு, காலை 9 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம், 10 மணிக்கு சூரியனார்கோவில் சூரிய பகவான் தரிசனம், 11 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோயில் தரிசனம், 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் கிரக தரிசனத்துக்குபயணிகள் இறக்கிவிடப்படுவார்கள்.
பிற்பகல் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோயில் தரிசனம்,மாலை 4 மணிக்கு கீழபெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், 4.45 மணிக்கு திருநள்ளாறு சனி பகவான் கோயிலுடன் தரிசனம் நிறைவடைகிறது.
மாலை 6 மணிக்குபுறப்பட்டு இரவு 8 மணிக்குள் பேருந்து மீண்டும் கும்பகோணம் வந்தடையும். நவக்கிரக சுற்றுலாவுக்கு பயணகட்டணம் ரூ.750 ஆகும். இத்தலங்களை காரில் சென்று தரிசிக்க வாடகையாக மட்டும் குறைந்தது ரூ.6,500 செலவிட வேண்டிய நிலையில், பேருந்துக்கு குறைவான கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.