தந்தையை முன்னிறுத்தி களமிறங்கும் வித்யா ராணி- கிருஷ்ணகிரியில் களம் எப்படி உள்ளது..?
வரும் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரியில் போட்டியிடுகிறார் வீரப்பனின் மகள் வித்யா ராணி.
கிருஷ்ணகிரி தொகுதி
தமிழகத்தின் கர்நாடக, ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள தொகுதி கிருஷ்ணகிரி. பிற மாநிலத்தவரும் இந்த தொகுதிக்கு உட்பட பகுதியில் தொழிலின் காரணமாக அதிகளவில் குடிபெயர்ந்துள்ளனர்.
சவாலான இந்த தொகுதியில் வேட்பாளர்களாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 முறை ஓசூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோபிநாத் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணி பல இவருக்கு பெரும் உந்துதலாக இருக்கின்றது.3 முறை எம்.எல்.ஏ என்ற காரணத்தால் தொகுதியிலும் நன்கு அறியப்பட்ட முகமாகவே கோபிநாத் உள்ளார்.
அதிமுக தரப்பில் ஓசூர் மண்டல குழு தலைவர், ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரான வி.ஜெயப்பிரகாஷ் போட்டியிடுகிறார்.எல்லை தொகுதி என்பதால், காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய - மாநில அரசுகளின் மெத்தன போக்குகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி தேர்தலை சந்திக்கபோவதாக கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் அக்கட்சி மாநில செய்தி தொடர்பாளரான நரசிம்மனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகால பிரதமரின் ஆட்சி திட்டங்களை சுட்டிக்காட்டியும், மாநில அரசு மீது இருக்கும் அதிருப்தியையும் பிரச்சார யுக்தியாக அவர் கையில் எடுத்துள்ளார்.
வித்யா ராணி
இவர்களை எதிர்த்து தான் களமிறங்கியுள்ளார் வித்யா ராணி. வீரப்பன் என்ற பெயர் தமிழகம் மக்களின் மனங்களில் இருந்து மறைவது கடினமான ஒன்றே. அதுவும் அவர் இருந்த தமிழக - கர்நாடக - ஆந்திர ஓர பகுதிகளில் அவருக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு இருந்துள்ளது.
அவர் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் சூழலில், தனது தந்தையின் உதவிகளையும், தமிழ் மக்களை வஞ்சித்து வரும் மத்திய - மாநில அரசுகளை எதிர்த்தும் தான் களமிறங்கியுள்ளதாக வித்யா ராணி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தொகுதிக்கு உட்பட இடங்களில் மற்ற 3 போட்டியாளர்களும் பிரபலம் என்றாலும், வித்யா ராணி களமிறங்கியுள்ள காரணத்தாலேயே தமிழகமெங்கும் கவனம் பெற்றுள்ளது கிருஷ்ணகிரி தொகுதி.