அங்கன் வாடியில் படிக்கும் கலெக்டர் மகள் - திடீர் ஆய்வில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஆய்வுக்குச் சென்ற ஆட்சியரின் குழந்தை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் கே.எம்.சரயு. இவரது மகள் மிலி (2). காவேரிப்பட்டினத்தில் உள்ள அரசு அங்கன்வாடியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், சரயு காவேரிப்பட்டினத்தில் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அதன்படி, அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
நெகிழ்ச்சி சம்பவம்
குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது, அங்கு பயின்று வரும் தனது மகள் படிப்பதை பார்த்தார்.
அதன்பின், அங்கு வழங்கப்படும் உணவைத் தனது மகள் மிலிக்கு ஊட்டியுள்ளார். தொடர்ந்து அவர் புறப்படுகையில் ஆட்சியரின் மகள் மிலி தன்னையும் அழைத்துச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியரிடம் அடம் பிடித்து அழுதுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு வந்திருந்த அதிகாரிகள், மற்றும் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளும், தரம் வாய்ந்த பள்ளிகள் எனப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது குழந்தையை அரசு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்துள்ள ஆட்சியர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.