வாய பொத்திட்டு இருக்கணும்.. கடவுள் இருக்கான் - RCB-யை தெறிக்கவிட்ட முன்னாள் வீரர்!
ஆர்சிபி அணியின் தோல்வி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
பெங்களூரு தோல்வி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. தோல்வியின் மூலம் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் தோல்வி குறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் "கிரிக்கெட் விளையாடும் போது வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும்.
ஈ சாலா கப் நம்தே
இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும். ஆண்டவன் என்ற ஒருவன் நிச்சயம் இருக்கின்றான். வாழ்க்கையில் நீங்கள் ஏதேனும் ஒரு விஷயம் செய்கிறீர்கள் என்றால் தயவு செய்து வாயை மூடிக் கொண்டு உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
வேறு எதுவும் பேசாதீர்கள். ஆர்சிபி வீரர்கள் வாயை மூடிக் கொண்டு இருந்திருந்தால் இந்நேரம் சரியாக விளையாடி இருப்பார்கள். ஆனால், சிஎஸ்கேவை தோற்கடித்து விட்டு அவர்கள் வேண்டுமென்றே கொண்டாடினார்கள். ஏதோ தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே-ஆஃப்புக்கு வந்ததை ஆர்சிபி பெரிய சாதனை போல் கருதிக் கொண்டது.
ஈ சாலா கப் நம்தே என்று ஆர்சிபி ரசிகர்கள் 17 ஆண்டுகளாக சொல்லிக் கொள்கிறார்களே, தவிர ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. நாங்களும் விராட் கோலியின் ரசிகர்களாக தான் இருக்கின்றோம். நீங்கள் அமைதியாக இருந்திருந்தால் இந்நேரம் நீங்கள் வெற்றி பெற்று இருப்பீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.