கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரலாறு - ஓர் பார்வை!
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன் என்பவரால் 21 மார்ச் 2013 அன்று துவங்கப்பட்டது. கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஈ.ஆர்.ஈஸ்வரன் அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி தனி கட்சி தொடங்கினார்.
கட்சியின் தலைவராக பி.தேவராஜன், பொதுச் செயலாளராக ஈ.ஆர்.ஈஸ்வரன், பொருளாளராக கே.கே.சி.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இக்கட்சியின் தலைமை அலுவலகம் ஈரோட்டில் அமைந்துள்ளது. இதன் ஆதரவாளர்கள் பெரும்பாலும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கொங்கு பகுதியில் உள்ளனர்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கொங்கு பகுதிகள் ஆளும் அரசுகளால் வளர்ச்சி திட்டங்கள் இன்றி புறக்கணிக்கப்படுவதாகவும், இதனால் கொங்கு நாடு என்ற தனி மாநிலம் வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசி வந்தார்.
தேர்தல் களத்தில்..
இக்கட்சி 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் 2,76,118 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனிடம் தோல்வியை தழுவினார்.
2016 சட்டமன்ற தேர்தலில் 72 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட டெபாசிட் வாங்கவில்லை. மொத்தம் 1.70 லட்சம் வாக்குகள் பெற்றனர்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டனர். இக்கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 6,26,293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து திருச்செங்கோடு, பெருந்துறை, சூலூர் என 3 தொகுதிகளில் போட்டியிட்டனர். இதில் இக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மட்டும் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. கட்சியின் வேட்பாளராக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.
கொள்கைகள்
- சென்னையையும், சென்னையச் சுற்றியும் உருவாக்கப்படுகின்ற கட்டமைப்பு வசதிகளை தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் சரிசமமாகச் செயல்படுத்த வேண்டும்.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்க, தொலைநோக்குப் பார்வையோடு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். உடனடியாக நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
- தேசிய நதிநர் இணைப்பை துரிதபடுத்தி நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும்.
- விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி மத்தியிலும், மாநிலத்திலும் விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தயாரிக்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
-
அனைத்து மாவட்ட தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பளிக்கின்ற தொழிற்சாலைகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசை வலியுறுத்துவோம்.