இந்து மக்கள் கட்சி - வரலாறும் அரசியலும் - ஒரு பார்வை!!
இந்து மக்கள் கட்சி
விஷ்வா இந்து பரிஷத் (VHS) ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (RSS) போன்ற அமைப்புகளில் இருந்து வந்தவர்களில் ஒருவரான அர்ஜுன் சம்பத்தால் நிறுவப்பட்ட கட்சியே இந்து மக்கள் கட்சி.
இந்து சமயம் சார்ந்த ஒரு அரசியல் கட்சியாக பயணிக்கும் இந்து மக்கள் கட்சி, தற்போது அரசியலில் மத்திய ஆளும் பாஜக அரசிற்கு நேரடி ஆதரவை அளித்து வருகின்றது.
1980-ஆம் ஆண்டு ராமகோபாலன் துவங்கிய இந்து முன்னணி இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றிய அர்ஜுன் சம்பத், பின்னர் 1993-ஆம் ஆண்டு அதிலிருந்து பிரிந்து இந்து மக்கள் கட்சியை நிறுவினார்.
1990-களில் ராமகோபாலன் அதிமுக பக்கம் சாய்ந்த போது, அது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் சிலர் அப்போது அங்கிருந்து பிரிந்து வந்துள்ளனர். அப்படி வெளியே வந்த அர்ஜுன் சம்பத்'தால் துவங்கப்பட்ட கட்சி தான் இந்து மக்கள் கட்சி.
அர்ஜுன் சம்பத்
இக்கட்சியின் தலைவரான அர்ஜுன் சம்பத், தனது ஆக்ரோஷமான பேச்சுக்களால் தமிழகத்தில் அறியப்பட்ட தலைவராக இருக்கின்றார். இந்துத்துவ கொள்கைகளில் தீவிரமாக நாட்டம் கொண்ட அவர், சிறுவயதிலேயே தன்னை ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வா இந்து பரிஷத் அமைப்புகள் இணைத்து கொண்டு தீவிரமாக பணியாற்றினார்.
1993-ஆம் ஆண்டு முதல் இந்து மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் அர்ஜுன் சம்பத், தற்போது பாஜகவை ஆதரித்து வருகிறார். இவரின் கருத்துக்களின் மூலம் இவர், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
கோரிக்கைகள்
இக்கட்சியின் முக்கிய கோரிக்கைகளில் சில,
- சாதி வெறியைத் தூண்டும் சங்கங்களைத் தடைசெய்ய வேண்டும்.
- ஆலயங்களின் நிர்வாகத்தை அரசு மற்றும் அரசியல் சார்பற்ற அறவோர் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
- மதுக்கடைகளையும், போதைப் பொருட்களையும் தடைசெய்ய வேண்டும்.
- அனைத்து சூதாட்டங்களையும் தடைசெய்ய வேண்டும்.
- அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை.
- காவிரி ஆற்றில் தமிழகத்திற்குரிய பாரம்பரிய உரிமைகளைக் காப்பற்ற வேண்டும்.
- தென்னகத்தின் நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
- காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள விசேஷ அந்தஸ்து போல், தமிழகத்திற்கும் வழங்க வேண்டும்.
- இலங்கை மீது போர் தொடுத்து தனித் தமிழீழம் அமைத்திட வேண்டும்.
- இந்து யாத்ரிகர்களுக்கும் ஹஜ் பயனிகளை போல உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.