தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற பெரியார்; கொதித்த நிர்மலா சீதாராமன் - கொளத்தூர் மணி பதிலடி
தந்தை பெரியார், தமிழை காட்டுமிராண்டி மொழி என ஏன் சொன்னார் என கொளத்தூர் மணி விளக்கமளித்துள்ளார்.
காட்டுமிராண்டி மொழி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தமிழ்நாட்டு எம்பிக்கள் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளை வாபஸ் பெற வைத்துவிட்டீர்கள்.
ஆனால் தமிழை காட்டு மிராண்டி மொழி என விமர்சித்த பெரியார் படத்துக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறீர்களே? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, ஒரு பெற்றோர் அல்லது ஒரு தந்தை தன் மகனையோ, மகளையோ பார்த்து, தறுதலை என்று பேசுவது அவன் தறுதலையாகப் போகவேண்டும் என்ற விருப்பத்தில் அல்ல.
கொளத்தூர் மணி விளக்கம்
உன்னை மாற்றிக் கொள் என்பதற்காக. பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகூட, தமிழ் அறிவியல் இல்லாத வெறும் மதமும் காதலும் மட்டுமே கொண்ட மொழியாக இருக்கிறது, அறிவியல் இல்லை என்ற கோபத்தால் வந்ததாக புரிந்துகொள்ளவேண்டும்.
அதனால் தான் பெரியார் கூட சொன்னார். யாராவது அறிவியல் சார்ந்த, மக்கள் முன்னேற்றம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வந்தால் என் செலவில் அச்சிட்டு உங்களுக்கு சன்மானமும் கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று அறிவித்தவர் பெரியார். தமிழை மக்களுக்கானதாக ஆக்கவேண்டும் என்று அவர் பார்த்தார்.
ஆக்குவதற்கான சில முயற்சிகளாக எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தார்; தமிழை அழிக்க வந்த இந்தியை எதிர்த்துப் போராடினார். குறளை முன் வைத்தார். ஆனால் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று புரியவில்லை. ஒற்றைச் சொல்லை எடுத்துக் கொண்டு, அதற்கு பின்னால் இருக்கும் எதையும் பார்க்காமல் பேசுபவர்களாகத் தான் இவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.