கோலியும், ரோகித்தும் அப்படித்தான்.. கேப்டன் கில் கொடுத்த விளக்கம்!
கோலியும், ரோகித்தும் எனது ஹீரோக்கள் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் நடக்கும் நிலையில்,
இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் மற்றும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவரும் ஒருநாள் தொடருக்கான கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தினர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த கில், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களை போல் உருவாக வேண்டும் என்றே சிறுவயதில் கனவு கண்டேன். அவர்களிடம் இருக்கும் வெற்றிக்கான பசி எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தது. இரு ஜாம்பவான்களை வழிநடத்துவது என் வாழ்வின் மிகப்பெரிய கவுரவம்.
கில் பெருமிதம்
இந்த ஒருநாள் தொடரின் போது கூட அவர்களிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். எப்போதெல்லாம் அழுத்தமான சூழலை எதிர்கொள்ள வேண்டுமோ, அப்போது எந்தவித தயக்கமோ ஈகோவோ இல்லாமல் இருவரின் ஆலோசனைகளையும், அட்வைஸையும் கேட்டுக் கொள்வேன்.
இந்திய அணிக்காக ஆடிய இத்தனை ஆண்டுகளில் ஒரு வீரராக ஏராளமான சூழல்களை கவனித்திருக்கிறேன். அந்த சம்பவங்கள் எனக்கு உபயோகமாக இருந்து வருகிறது. ஒரு கேப்டனாக இருக்கும் போது ஓய்வறையில் உள்ள அத்தனை வீரர்களும் மனதளவில் பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்.
அப்படியான ஒரு தலைவனாக இருக்க விரும்புகிறேன். ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. தோனியிடம் இருந்து விராட் கோலி. விராட் கோலியிடம் இருந்து ரோகித் சர்மா.. ரோகித் சர்மாவிடம் இருந்து தற்போது என்னிடம் ஒரு லெகசி வந்து சேர்ந்துள்ளது.
அதனை பத்திரமாக அடுத்த கேப்டனிடம் கொண்டு சேர்ப்பதே என்னுடைய பணி. இந்திய அணியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வது தொடர்பாக இருவரிடமும் ஆலோசித்துள்ளேன். நிச்சயம் அது எனக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.