மருமகள் கொலைக்கு கூலி தராத மாமியார் - போலீசில் புகாரளித்த கொலையாளி
செய்த கொலைக்கு பணம் தராததால் கொலையாளி போலீசில் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த அஞ்சலி என்ற பெண் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 07.06.2024 அன்று, பால் பண்ணையிலிருந்து வீடு திரும்பியபோது இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து அவரது விவாகரத்து பெற்ற கணவர் நிதின் குப்தா மற்றும் நிதின் குப்தாவின் தாயாரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
வீடு பிரச்சனை
விசாரணையில், அஞ்சலி வசித்து வந்த வீடு அவரது முன்னாள் கணவர் நிதின் குப்தாவின் பெயரில் இருந்துள்ளது. அந்த வீட்டை நிதின் குப்தாவின் தாயார், யஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியாவுக்கு விற்றுள்ளார். ஆனால் அஞ்சலி வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார்.
இதனையடுத்து, யஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியா இணைந்து, நீரஜ் ஷர்மா என்பவருக்கு ரூ. 2 லட்சம் பணம் கொடுத்து அஞ்சலியை கொலை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனையடுத்து யஷ்பால், சுரேஷ் பாட்டியா, நீரஜ் ஷர்மா ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாமியாருக்கு தொடர்பு
ஒரு வருடத்திற்குப் பிறகு, ஜாமீனில் வெளிவந்த நீரஜ் சர்மா, அஞ்சலியின் முன்னாள் கணவர் மற்றும் மாமியாருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அஞ்சலியை கொலை செய்தால் ரூ.20 லட்சம் தருவதாக உறுதியளித்த அவரது மாமியார் 1 லட்சம் மட்டுமே முன்பணமாக அளித்துள்ளார்.
சிறையில் இருந்ததால் மீதமுள்ள பணத்தை வாங்க முடியவில்லை. தற்போது ஜாமீனில் வெளிய வந்து அந்த பணம் குறித்து கேட்ட போது அஞ்சலியின் மாமியார் கொடுக்க மறுத்துள்ளார். இதற்கு ஆதாரமாக அவரது செல்போன் உரையாடல்களையும் காவல்நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார்.