மன்னிக்கவே முடியாது; உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம் - கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதி?
கேரள நர்ஸ் மரண தண்டனை விவகாரத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் மன்னிக்க மறுத்துள்ளார்.
நர்ஸ் மரண தண்டனை
கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா ஏமன் அந்நாட்டைச் சேர்ந்த தலாலு அப்துல் மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அவரது தண்டனையைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக சனாவில் உள்ள ஏமன் சிறைத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தொடர்ந்து தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில், இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என அறியப்படும் ஷேக் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் இந்த விவகாரத்தில் தலையிட்டதில் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது.
தொடர்ந்து கேரள செவிலியரை வீட்டிற்கு அழைத்து வரப் போராடும் ஏமனில் உள்ள சமூகச் சேவகர் சாமுவேல் ஜெரோம் பேசுகையில், ”மஹதியின் குடும்பத்திற்கு 'இரத்தப் பணம்' வடிவில் 1 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், பின்னர் அவர்கள் பிரியாவை மன்னித்து,
என்ன நடக்கிறது?
அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்குவார்கள் என்றும் இந்தியாவிலிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன. இந்தியாவில் மக்கள் 'இரத்தப் பணம்' பேச்சுவார்த்தை இருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.
அந்த வார்த்தையே மிகவும் தவறு. நான் இரண்டு முறை மஹதியின் சகோதரரையும் ஒருமுறை தந்தையையும் சந்தித்துள்ளேன். அது வெறும் கருணைக்காக மன்றாடுவதுதான். அப்படியிருக்கையில், அவர்களிடம் போய் எவ்வளவு தொகையைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று கேட்க முடியாது. அது முற்றிலும் தவறானது. இது வருத்தமளிக்கிறது.
இந்தியாவில், மக்கள் அதைப் பற்றி எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஊடகங்களில் வந்த அனைத்து விஷயங்களால், மஹதியின் சகோதரர் அதில் ஆர்வம் இல்லை எனப் பதிவிட்டார். இதனால் நமக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவர்கள் எல்லோரும் மிகக் கோபமாக உள்ளனர்.
பேச்சுவார்த்தையில் சுமுகம் ஏற்பட வேண்டும். எனவே இப்போது நாம் மீண்டும் அதற்கான பாலங்களை கட்ட வேண்டும். அதேநேரத்தில், நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்று தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.