வேலைக்கு போறது பிடிக்கல.. மனைவியை கொடூரமாக தாக்கி செல்ஃபி எடுத்த கணவன்!
மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காமல் அவரை கணவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் தம்பதி
கேரளா, திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்(27). இவர் மனைவி ஆதிரா(24). இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்தான் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், மது போதைக்கு அடிமையான திலீப் குடும்பத்தை சரிவர கவனித்து பார்ப்பதில்லை. குடும்பத்தில் கடன் அதிகமாக இருப்பதாலும், குழந்தைகளை வளர்க்கவும் மனைவி சூப்பர்மார்க்கெட் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார். தன் மனைவி வேலைக்கு சென்று சம்பாதிப்பது கணவர் திலீப்பிற்கு பிடிக்கவில்லை.
தாக்கிய கணவன்
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி பயங்கர குடிபோதையில் வீட்டிற்கு வந்த திலீப் ஆத்திரத்தில் மனைவியை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். இதன்காரணமாக ஆதிராவின் முகத்தில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், வலி தாங்காமல் துடித்து அழும் மனைவியுடன் செல்பி வீடியோ எடுத்த கணவர்,
நான் போதையில் இருந்தாலும் நியாயமான காரியத்தை தான் செய்கிறேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில் அழுத குரலில் பேசும் மனைவி ஆதிரா, "என் கணவர் சம்பாதித்து பணம் தந்து கடனை அடைத்தால் நான் வேலையை விட்டுவிட்டு வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொள்வேன்.
நான் வேலைக்கு செல்லவில்லை என்றால் குழந்தைகள் பட்டினி தான் கிடப்பார்கள்" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், திலீப் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.