ஹேமா கமிட்டி அறிக்கை - 3வருஷமா என்ன பண்ணீங்க..கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக 6 வழக்குகள் கேரளா உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டுவருகிறது.
ஹேமா கமிட்டி
மலையாள திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக (casting couch) சுரண்டப்படுகிறார்கள் என்று ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு மலையாள நடிகைகள் பலரும் நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இந்த குற்றச்சாட்டுகள் கேரள திரைத்துறையை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரைத்துறையும் உலுக்கியது.
தொடர்ந்து மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக 6 வழக்குகள் கேரளா உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜெயசங்கரன் நம்பியார், சுதா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு இன்று வந்தது.
அப்போது கேரள அரசு தரப்பில்,ஹேமா கமிட்டியின் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
சரமாரி கேள்வி
இதனைப் பெற்றுக்கொண்ட நீதிபதி கடந்த 2021ஆம் ஆண்டே ஹேமா கமிட்டி அறிக்கை காவல்துறை உயர் அதிகாரிக்கு வழங்கப்பட்ட போதும் அறிக்கையின் மீது 3ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?என்று கேரள அரசுக்குச் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்.
மேலும் அறிக்கையில் உள்ள அனைத்து தகவல்களையும் ஆராய்ந்த பிறகே அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும், ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஓணம் விடுமுறைக்குப் பிறகு விசாரணை நடைபெறும் என்று கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.