20 ரூபாய் நோட்டுகளை சேமித்து லட்சாதிபதியான சிறுமி - வீட்டுக்கடனை அடைத்த தந்தை!
சிறுமி ஒருவர் தனது சேமிப்பால் லட்சாதிபதியானது மட்டுமின்றி வீட்டுக்கடனையும் அடைத்த நிகழ்வு நடந்துள்ளது.
20 ரூபாய்
கேரள மாநிலம் கருவாரகுண்டில் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகள் பாத்திமா நஷ்வா (9) நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு புதிய 20 ரூபாய் நோட்டின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமா அந்த நோட்டுகளை சேகரிக்க தொடங்கியுள்ளார்.
அவரின் சேமிப்பு பழக்கம் இப்ராகிமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரும் தனக்கு கிடைத்த 20 ரூபாய் நோட்டுகளை மகளிடம் கொடுத்து வந்துள்ளார். பாத்திமாவும் கடந்த 2 வருடங்களாக 20 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து சேர்த்து வந்துள்ளார்.
இன்ப அதிர்ச்சி
இந்நிலையில் கடந்தவாரம் தான் சேமித்து வைத்த 20 ரூபாய் அடங்கிய மூட்டையை தந்தையிடம் கொடுத்து எண்ணச் சொல்லியுள்ளார். அதனை எண்ணி முடித்ததும் இப்ராகிம் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த மூட்டையில் ரூ. 1,03,000 லட்சம், அதாவது 5,150 இருபது ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. அந்த பெரும் தொகையில் தனது செல்ல ‘செல்வ' மகளுக்கு ஒரு நல்ல பரிசு வாங்கிக்கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டுக்கடனை அடைக்க இப்ராகிம் பயன்படுத்தியுள்ளார்.