தீவிரமாக பரவும் காய்ச்சல்.. பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு!
வேகமாக பரவி வரும் காய்ச்சலால் பெண் மருத்துவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரவும் காய்ச்சல்
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் மாணவி
இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி மருத்துவபடிப்பை முடித்து விட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த இரண்டு நாட்களாக சிந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது இவருக்கு சோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது, அதில் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என்று முடிவுகள் வந்துள்ளது.
மீண்டும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்ட நிலையில் முடிவுகள் வருவதற்கு முன்னர் இன்று காலையில் அவர் உயிரிழந்தார். அவர் சில காலம் ஸ்டிராய்டு எடுத்துள்ளார், பின்னர் அவரது உடலில் இம்யூனிட்டி குறைவாக இருந்ததால் அவர் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.