அரவிந்த் கெஜ்ரிவால் கைது: அமெரிக்கா, ஜெர்மனியை அடுத்து ஐநா சர்ச்சை கருத்து - துணை ஜனாதிபதி பதிலடி
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா கருத்து தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் கைது
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தலையீடு தேவையற்றது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.
ஐநா கருத்து
அதேபோல், ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்,
தேர்தல் நடக்கும் எந்த நாட்டையும் போலவே, இந்தியாவிலும் ஒவ்வொருவரது அரசியல் உரிமைகளும், சிவில் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று பெரிதும் நம்புகிறோம். ஒவ்வொருவரும் நேர்மையான, சுதந்திரமான சூழ்நிலையில் வாக்களிக்க முடியும் என்றும் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி பதிலடி
தற்போது, இதற்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், இந்தியாவின் சட்டம் ஒழுங்கு குறித்து வெளியில் இருந்து யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான நீதி நடைமுறை உள்ள ஜனநாயகம், இந்தியாவில் உள்ளது. எந்த ஒரு தனி நபருக்காகவோ, ஒரு குழுவினருக்காகவோ, சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இங்கு சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பதிலளித்துள்ளார்.