கீர்த்தி சுரேஷின் அரசியல் ஆசை - அவரே சொன்ன தகவல்
அரசியலுக்கு வரும் ஆசை உள்ளதா என்ற கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் ஆகஸ்ட் 15 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் மதுரை தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற ரகு தாத்தா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் சிறுமிகளுடன் அமர்ந்து படத்தின் படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரசித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்தி திணிப்பு
இதில் அவர் பேசியதாவது, மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். மதுரை நான் அடிக்கடி வந்துசெல்லும் ஊர். மல்லிகை பூ, மீனாட்சியம்மன் கோயில் என மதுரையில் எனக்கு பிடித்தவை நிறைய உள்ளன.
ரகு தாத்தா படம் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும். இப்படத்தில் இந்தி திணிப்பு மற்றும் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி இந்த படத்தில் பேசி இருக்கிறோம். ஆனால் எதுவும் சீரியசாக இருக்காது. காமெடியாக தான் சொல்லியிருப்போம். இது முழுக்க முழுக்க காமெடி படம்.
அரசியல்
எனக்கு இந்தி தெரியும். இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தியை திணிக்க கூடாது என்பதை சொல்லியுள்ளோம். மொழியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு படத்தை பற்றி பேச முடியும். மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் திணிப்பு என்பது தவறானது. நம் மக்கள் தான் இதை புரிந்து கொள்வார்கள். அதனால்தான் ‘ரகு தாத்தா’ என பெயர் வைத்துள்ளோம். இந்தப் படம் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும்.
அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை. நடிப்பு மட்டும் தான். ஒருவேளை அரசியலில் வந்து விட்டால் அன்று நான் கூறியதை சொல்லிக் காட்டக்கூடாது என்பதற்காக நான் இல்லை என்றும் மறுத்து வருகிறேன். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் இருக்கலாம் என பதிலளித்துள்ளார்.