மோடி மீண்டும் வந்தால்...நாட்டின் கஜானாவே காலியாகிடும் - கதிர் ஆனந்த் எச்சரிக்கை
தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் கதிர் ஆனந்த், மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கஜானாவே காலியாகிவிடும் என எச்சரித்துள்ளார்.
கதிர் ஆனந்த்
திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கினார்.
வேலூர் மக்களவை தொகுதியில் களமிறக்கப்பட்ட அவர், 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக வேலூர் மக்களவை தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் திமுகவின் திட்டங்கள், பாஜகவின் எதிர்பலையும் மீண்டும் அவருக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
கஜானாவே காலியாகிடும்
தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட இடங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பத்தலபல்லி பகுதியில் வாக்கு சேகரித்த அவர் பேசும் போது, அவருக்கு திமுக கூட்டணி கட்சியினர் பெரும் வரவேற்பை அளித்தனர்.
மோடி ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மீண்டும் அவர் வந்தால் விலைவாசி கடுமையாக உயரும். ஏழை எளிய மக்கள் பெரிதும் துன்புறுவார்கள். மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் கஜானாவே காலியாகிவிடும். 100 நாள் வேலை திட்டத்தையும் அவர் முடக்கிவிடுவார்.
மனைவி வாக்கு சேகரிப்பு
கதிர் ஆனந்திற்காக குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் அவரது மனைவி சங்கீதா கதிர் ஆனந்த்.
தீப்பொட்டி தொழிற்சாலை, துணிக்கடை, ஹோட்டல் போன்ற பகுதிகளிலும் பணியாற்றும் பெண்களிடம் மும்முரமாக வாக்கு சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, குடியாத்தம் மக்களுக்காக மத்திய அரசிடம் போராடி பல திட்டங்களை தனது கணவர் பெற்று கொடுத்தார் என்றும் அந்த தைரியத்தில் தான் தாம் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக கூறினார்.