பிரிட்டன் இளவரசி புற்றுநோயால் அவதி; வெளிப்படையாக பேசி வீடியோ வெளியிட்ட கேட்!
பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடல்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டிஷ் இளவரசி
பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன்(42) ஆகிய இருவருக்கு 2011 ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இளவரசி கேட் மிடில்டனை இங்கிலாந்தில் தென்படவில்லை என்ன புதிய பரபரப்பு கிளம்பியது. அதாவது, இரண்டு மாதங்களுக்கு முன் அவர் வயிற்று வலி காரணமாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடந்ததாக அரண்மனை செய்தி வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து, இளவரசியை காணவில்லை, அவர் உடல்நிலை மோசமடைந்துவிட்டது, கேட் கோமாவுக்கு சென்றுவிட்டார், இறந்துவிட்டார் என பல புரளிகள் தினந்தோறும் வந்து கொண்டிருந்தது.
புற்றுநோயால் அவதி
மேலும், அவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்வியை லண்டன் மக்கள் சில சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து வீடியோ மூலம் கேட் மிடில்டன் பேசியுள்ளார்.
அதில், "எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் குடும்ப நலன் கருதி நாங்கள் இந்த விவரங்களை வெளியே சொல்லாமல் இருந்தோம்.
எனக்கு புற்றுநோய் பாதிப்பு என தெரிந்தவுடன் எனக்கும் வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது.
இந்த கீமோ சிகிச்சையை அதே மருத்துவமனையில் தொடங்கியுள்ளேன். எங்கள் குழந்தைகளுக்கும் புரியும் கூறிவிட்டோம். தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டும் வர உதவும் விஷயங்களில் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.
ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் எந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை.