கலைஞர் மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு? தொடர் சிகிச்சையில் இருப்பதாக தகவல்!
கலைஞர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜாத்தி அம்மாள்
கலைஞர் கருணாநிதியின் மறைவை தாங்க முடியாத நிலையில், அவர் அப்போது சரியாக உணவு உண்ணாமல் இருந்ததால், தற்போது அவர் உணவு எடுத்துக்கொள்வதில் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் திட உணவுகள் எதை சாப்பிட்டாலும் அவை செரிக்காமல் ஜீரண கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி வருவதாகவும், அதனால் அவர் பழச்சாறு, சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை மட்டுமே பிரதானமாக உட்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.
ஜீரண கோளாறு
இந்த பிரச்னைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில நாட்களாகவே சிகிச்சை எடுத்து வந்தாலும், இன்னும் அது சரியாகாத நிலையில், வெளிநாடு சென்று இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா என்று கனிமொழி உள்ளிட்டோர் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
கடந்த 7ஆம் தேதி கருணாநிதி நினைவு நாளான்று, அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றபோது அருகே இருந்த ஒரு பெண்ணின் உதவியோடு சிறு தடுமாற்றத்தோடுதான் அங்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர் சிகிச்சை
முதல்வர் மு.க.ஸ்டாலின் சி.ஐ.டி நகரில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியபோதும் ராஜாத்தி அம்மாள் மிகுந்த சோர்வோடே காணப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ராஜாத்தி அம்மாள் சரியாக உணவு உட்கொள்ளாமல் அவதிப்பட்டு ஜீரண கோளாறுக்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ராஜாத்தி அம்மாளின் உடல்நிலை குறித்து கவலையடைந்துள்ள அவரது மகள் கனிமொழி, ராஜாத்தி அம்மாளை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வைக்கும் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து,
அவருக்கு தேவையான உதவிகளை பெறவும் கனிமொழி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.