சிவகங்கைக்கு குறி; உதயநிதியுடன் நெருங்கிய தொடர்பு - எம்பியாகும் கரு.பழனியப்பன்?
கரு.பழனியப்பன், திமுக சார்பில் சிவகங்கை எம்பி தொகுதிக்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரு.பழனியப்பன்
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்களே உள்ளன. இதனைத் தொடர்ந்து, கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகவுடன் மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை நடத்தியுள்ளன.
அதில், சிவகங்கை மக்களவை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இதற்கான கோரிக்கையை சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கைக்கு குறி?
இதற்கிடையில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதியின் மகன் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணா சங்கீதா மற்றும் செய்தித் தொடர்பு மாநில இணைச் செயலாளராக ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் சீட்டை பெற முயன்று வருகிறார்கள்.
மேலும், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பனும் சிவகங்கை தொகுதியை குறி வைத்துள்ளார். இவர் உதயநிதியுடன் நெருக்கமானவர். எனவே இதன் பேரில் சீட் வாங்க முயற்சிக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிவகங்கை காங்கிரஸ் கோட்டையாக உள்ளது.
ப.சிதம்பரம் 5 முறை இந்த தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில், இந்த முறை கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.