அரசியல் லாபத்திற்காக நீட் எதிர்ப்பு...கூட்டணி வைக்கும் விஜய்!! பாஜக கரு.நாகராஜன்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய கல்வி விருது விழாவில், நீட் தேர்வு குறித்து பேசியது பெரும் சலசலப்புகளை உண்டாக்கியது.
தமிழக பாஜகவினர், விஜய்யை கண்டித்து வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி செல்வம் ஆகியோர் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்கள்.அவர்களை தொடர்ந்து தற்போது தமிழக பாஜகவின் துணை தலைவர் கரு.நாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரு.நாகராஜன் அறிக்கை
அவ்வறிக்கை வருமாறு,
மருத்துவம் படிக்க முன்வரும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து அதை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு. இவ்வாறு நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே நீட்டை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும், அதை விஜய் ஆதரிக்கிறேன் என்பதும் வேடிக்கையானது.
உயர்கல்வி மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் என்பதையும் அவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். என்சிஇஆர்டி-க்கென தனி பாடத்திட்டம் இல்லை. அந்த அமைப்பின் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றன.
நீட் தேர்வு வந்த பிறகு பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் எத்தனை பேர் ஆண்டுதோறும் மருத்துவ இடங்களை பெறுகிறார்கள் என்பதையும், முன்பு அப்பிரிவினர் எத்தனை பேர் இடங்களை பெற்றிருக்கிறார்கள் என்பதையும் விஜய் முதலில் தெரிந்து கொண்டால் மிக்க நல்லது.
அரசியல் லாபத்திற்காக...
எல்லோரும் அரசியலுக்காக பேசுவதை இவரும் பேசி இருக்கிறார் என்றே கருதுகிறேன். சமூக நீதியின்படி தமிழகத்தின் இட ஒதுக்கீடு கொள்கை போலவே 100 சதவீதம் நீட் தேர்விலும் மாணவர் சேர்க்கையின்போது கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே நீட் தேர்வு எழுதுவதிலும் தமிழக மாணவர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் திட்டம் போட்டு தவறு செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். டிஎன்பிஎஸ்சி உட்பட தமிழகத்திலும் சில குளறுபடிகள் ஏற்பட்டன.அதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையும் குறை சொல்வது நியாயமாகாது?
அவர், ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லத் தொடங்கி இருப்பது கூட ஆச்சரியம் அளிக்கிறது. ‘நீட்’ குறித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் பேசுகின்றன. எனவே நாமும் பேசுவோம் என்பதைதான் அவர் பேச்சிலிருந்து உணர முடிகிறது. அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கும் கட்சிகள் கூட்டத்தில் விஜய்யும் இணைந்திருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.