கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க கூடாது - போர்க்கொடி தூக்கிய சிவகங்கை காங்கிரஸ் கமிட்டியினர்..!
சென்ற முறை சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய கார்த்தி சிதம்பரத்திற்கு இம்முறை சீட் வழங்க கூடாது என காங்கிரஸ் கமிட்டியினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கார்த்தி சிதம்பரம்
கடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் கார்த்தி சிதம்பரம். வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலிலும், சிவகங்கை தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி வருகின்றார். அண்மையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், வரும் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்கக்கூடாது என திமுகவினர் தெரிவித்திருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க, தற்போது சிவகங்கை காங்கிரஸ் கமிட்டியினரே கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக திரும்பியுள்ளனர். நடைபெற்ற சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்திக்கு எதிராக பேசிய கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருக்கு சீட் வழங்கக்கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் என கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.